சிந்து வெளிக் குறியீடுகளும் தமிழகப் பானை ஓட்டு குறியீடுகளும்

சமீபத்தில் சென்னையில் நடந்த சிந்துச் சமவெளி கண்டுபிடிக்கப்பட்டதன் நூற்றாண்டு நிறைவை ஒட்டி, 'Indus Signs and Graffiti Marks of Tamilnadu: A morphological Study' என்ற புத்தகம் முதல்வரால் வெளியிடப்பட்டது. 

சிந்துச் சமவெளி எழுத்துகள் அல்லது குறியீடுகள் என்ன சொல்கின்றன என்பது குறித்து ஆராயும் ஆய்வாளர்களுக்கு ஒரு முக்கியமான நூல் இது. சிந்து சமவெளியில் கிடைத்த முத்திரைகள், பானை ஓடுகளில் இருக்கும் குறியீடுகளுக்கும் தமிழகத்தில் கிடைத்த பானை ஓடுகளில் இருக்கும் குறியீடுகளுக்கும்... 

எந்த அளவுக்கு வடிவ ஒற்றுமை இருக்கிறது என்பதுதான் இந்த ஆய்வு. சிந்துவெளி முத்திரைகளில் உள்ள குறியீடுகளுக்கும் தமிழக பானை ஓட்டு குறியீடுகளுக்கும் இடையில் 60 % அளவுக்கு ஒற்றுமையும் சிந்துவெளி பானை ஓடுகளில் உள்ள குறியீடுகளோடு மட்டும் ஒப்பிட்டால் 90 % ஒற்றுமையும் இருப்பதாகவும் சொல்கிறது இந்த ஆய்வு.

சிந்துச் சமவெளிக்கும் திராவிட மொழிகளுக்கும் இடையிலான ஒற்றுமை அதிகமுள்ளது என இந்த ஆய்வைப் புரிந்துகொள்வது எளிது. ஆனால், இந்த ஆய்வின் நோக்கம் வேறு.
கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரொசெட்டா கல்வெட்டு...

ஒரு அற்புதமான தொல்லியல் கண்டெடுப்பு. அந்தக் கல்வெட்டில் ஒரே விஷயம் முதலில் சித்திர எழுத்துகளிலும் hieroglyphic, பிறகு Demotic எனப்படும் பழங்கால எகிப்திய எழுத்திலும் பிறகு பழங்கால கிரேக்கத்திலும் எழுதப்பட்டிருந்தது. மூன்று எழுத்துகளிலும் ஒரே விஷயம், மிக சில மாறுதல்களோடு சொல்லப்பட்டிருக்கிறது என்பது தெரிந்தது. இதற்குப் பிறகு, கிரேக்கத்தோடு சித்திர எழுத்துகளை ஒப்பிட்டு, ஒவ்வொரு சித்திர எழுத்தும் என்ன சொல்கின்றன என்பதை ஆய்வாளர் புரிந்துகொண்டனர்.

இதை வைத்து எகிப்திய சித்திர எழுத்துகளை புரிந்துகொள்ள ஆரம்பித்தனர். ஏற்கனவே தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள பானை ஓடுகளில் இருக்கும் குறியீடுகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட்டுவிட்டன.

சிந்துவெளிக் குறியீடுகளும் ஆவணப்படுத்தப்பட்டுவிட்டன. இந்த ஆய்வு இரண்டையும் ஒப்பிட்டிருக்கிறது. இந்நிலையில், ஏதாவது ஒரு காலகட்டத்தில் தமிழகப் பானை ஓட்டு குறியீடுகளுக்கு இணையாக, பிராமி எழுத்துகளும் கிடைத்தால், பானை ஓட்டுக் குறியீடுகளைப் புரிந்துகொள்ள முடியும். 
அப்போது அதற்கு இணையான சிந்துவெளிக் குறியீடுகளையும் புரிந்துகொள்ள முடியும்.
அந்த வகையில்தான் இது மிக முக்கியமான ஆய்வு. 

'Indus Signs and Graffiti Marks of Tamilnadu: A morphological Study' நூலின் விலை: 250


Post a Comment

Previous Post Next Post

Contact Form