பத்மபூஷன் திரு. பெ.தூரன்

 "செந்தமிழ் செல்வர்"

 பெரியசாமித் தூரன்


அறிமுகம்

பெரியசாமித் தூரன் (செப்டம்பர் 26, 1908 - ஜனவரி 20, 1987) (ம. ப. பெரியசாமித் தூரன். பெ.தூரன்). தமிழறிஞர், தமிழின் முதல் நவீனக் கலைக்களஞ்சியத்தைத் தொகுத்தவர். முன்னோடியான பாரதி ஆய்வாளர், மரபுவழிக் கவிஞர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், தமிழிசைப் பாடல்களின் ஆசிரியர், குழந்தைகளுக்கான பாடல்களை இயற்றியவர். நவீனத்தமிழ் அறிவியக்கத்துக்கு அடித்தளமாக விளங்கும் தமிழின் முதல் கலைக்களஞ்சியம், குழந்தைகள் கலைக்களஞ்சியம் இரண்டிற்கும் முதன்மை ஆசிரியராக இருந்தவர் எனும் வகையில் தமிழ் நவீன அறிவியக்கத்தின் முதன்மைப் பங்களிப்பாளர்களில் முக்கியமானவர்.

பிறப்பு, கல்வி

பெரியசாமித் தூரன் ஈரோடு மாவட்டத்தில் மொடக்குறிச்சி அருகே மஞ்சக்காட்டு வலசு என்ற ஊரில் பழனி வேலப்பக் கவுண்டருக்கும், பாவாத்தாளுக்கும் செப்டம்பர் 26, 1908-ல் பிறந்தார். தூரன் சிறு வயதில் தாயாரை இழந்தவர். இவரது இயற்பெயர் மஞ்சக்காட்டு வலசு பழனியப்பக்கவுண்டர் பெரியசாமி. சொந்த ஊரான மொடக்குறிச்சியில் தொடக்கக் கல்வி பயின்றார். அப்போது ஆசிரியராக இருந்த திருமலைச்சாமி அய்யங்காரால் அவருக்கு தமிழார்வம் உருவானது. ஈரோடு கருங்கல்பாளையம் நூலகத்தில் தொடர்ந்து நூல்களை வாசித்து வந்தார். உயர்நிலைக் கல்வியை ஈரோடு மகாஜனசபா உயர்நிலைப்பள்ளியில் படித்தார். 1927-ல் சென்னை மாநிலக் கல்லூரியில் அறிவியல் பாடங்களில் இண்டர்மிடியட் முடித்தபின் 1929-ல் கணிதத்தில் எல்.டி (ஆசிரியர் பயிற்சி ) பட்டம் பெற்றார்.

1930-ல் பட்டப்படிப்புக்கு சேர்ந்தபோதிலும் இந்திய விடுதலைப் போராட்ட நாயகர்களான பகத்சிங், சுகதேவ், இராஜகுரு ஆகியோர் 1931-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 23-ஆம் நாள் தூக்கிலிடப்பட்டபோது அதை எதிர்த்து நிகழ்ந்த மாணவர் கிளர்ச்சியில் கலந்து கொண்டமையால் இளங்கலை இறுதி ஆண்டுத் தேர்வை எழுதாமல் புறக்கணித்தார். இறுதிவரை பட்டப்படிப்பை முடிக்கவில்லை.

கல்விப்பணி

தூரன் பள்ளி ஆசிரியராக தன் வாழ்க்கையை தொடங்கினார். 1929 முதல் கோபிசெட்டிப்பாளையம் வைரவிழா உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். பட்டப்படிப்பை கைவிட்டபின் 1931 முதல் போத்தனூர் மற்றும் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் இயங்கிய ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தில்  உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார். தேசிய கல்வி இயக்கத்தை ஒட்டி காந்தியக் கல்விக் கொள்கைகளை கடைப்பிடிக்கும் ராமகிருஷ்ணா வித்யாலயா நிறுவனங்கள் தி.சு. அவினாசிலிங்கம் செட்டியார் தொடங்கி நடத்தியவை. அங்கு பணியாற்றும்போது கல்வி நிலையங்கள் குறைவான செலவில் நடத்தப்படவேண்டும் என்னும் கொள்கையின்படி தூரன் மிகக்குறைந்த ஊதியமே பெற்றுக் கொண்டு துறவி போல வாழ்ந்தார் என்று அவினாசிலிங்கம் செட்டியார் தன் நினைவுக் குறிப்புகளில் குறிப்பிடுகிறார். 1934-ல் ஹரிஜன நிதி திரட்டும் பொருட்டு காந்தி கோவை வந்தபோது ராமகிருஷ்ணா பள்ளிக்கு வருகை தந்தார். அப்போது காந்திக்கு வரவேற்புரை ஆற்றி அவர் உரையை மொழிபெயர்த்தவர் பெ.தூரன். 1948 வரை ராமகிருஷ்ணா பள்ளிகளில் பணியாற்றினார்.


அரசியல்

பெரியசாமித் தூரன் 1931-ல் காங்கிரஸ் இளைஞர் அமைப்பு நடத்திய போராட்டங்களில் கலந்துகொண்டு கல்வியை துறந்தவர். காங்கிரஸ் முன்வைத்த கிராம நிர்மாணச் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டார். ஆசிரியப் பணி ஆற்றும்போதே கோபிசெட்டிப்பாளையம், போத்தனூர் பகுதிகளில் கிராமப்புற மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டார். கதர்ப்பிரச்சாரம் போன்றவற்றில் கோவை ஐயாமுத்துவுடன் இணைந்து பணியாற்றினார். தி.சு.அவினாசிலிங்கம் செட்டியாருக்கு அணுக்கமானவராக இருந்த தூரன் இறுதிவரை காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாடு கொண்டிருந்தார்.

ஆன்மிகம்

பெரியசாமித் தூரன் குடும்பமே முருக பக்தர்கள். சென்னிமலை முருகன் மேல் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த பெரியசாமித் தூரன் முருகன் மீது சிறந்த பக்திப் பாடல்களைப் பாடியிருக்கிறார். தமிழக முருகபக்திப் பாடல்களில் முதன்மையானது என்று கருதப்படும் ’முருகா முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்’ பெரியசாமித் தூரனால் பாடப்பட்டது. இறுதிக்காலத்தில் திருவண்ணாமலை யோகி ராம்சுரத் குமார் மீது பற்று கொண்டிருந்தார். யோகி ராம்சுரத் குமார் குறித்தும் இசைப்பாடல் இயற்றியிருக்கிறார்.

இதழியல்

பெரியசாமித் தூரன் சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ மாணவராக இருந்தபோது சி. சுப்பிரமணியம், நெ.து. சுந்தரவடிவேலு, ஓ.வி. அளகேசன், இல.கி. முத்துசாமி, கே.எம். இராமசாமி, கே.எஸ். பெரியசாமி, கே.எஸ். பழனிசாமி போன்ற கல்லூரித் தோழர்களுடன் இணைந்து 'வனமலர்ச் சங்கம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பின் மூலம் 'பித்தன்’ என்ற இதழை நடத்தினார். திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் நடத்திய சாது அச்சுக் கூடத்தில் பித்தன் இதழ் அச்சிடப்பட்டது.


ஆங்கிலத்தில் வெளிவந்த "டைம்" இதழ் தோற்ற அமைப்பில் "காலச்சக்கரம்" என்ற இதழை பொள்ளாச்சி நா. மகாலிங்கத்தின் தந்தையார் ப. நாச்சிமுத்துக்கவுண்டர் ஆதரவுடன் தொடங்கிப் பல்சுவை இதழாக நடத்தினார். அதில் பெரும்புலவர் வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் துணையுடன் காளமேகப் புலவரின் சித்திரமடல், வடிவேல் பிள்ளையின் மோகினிவிலாச நாட்டிய நாடகம், அவிநாசிப் புலவரின் திங்களூர் நொண்டி நாடகம், சாமிநாதக் கவிஞரின் கொன்றைவேந்தன் வெண்பா ஆகியவற்றை பதிப்பித்தார்.

புகழ்பெற்ற இசைப்பாடல்கள்

• முருகா முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்

•அழகு தெய்வமாக வந்து பழனிமலை மீதில் நிற்போன்

•கொஞ்சிக் கொஞ்சி வா குகனே.

•புண்ணியம் ஒரு கோடி நான் புரிந்தேனோ

•கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய் காட்சியளிப்பது..

•பச்சைக்குழந்தை பருவத்தே வந்து என்னை

•எங்கே தேடுகின்றாய்?

•சிறுமலரே உன்னை..

•என்னென்ன விளையாட்டம்மா

•எங்கு நான் செல்வேனய்யா?

•தாயே திரிபுரசுந்தரி

•முரளிதரா கோபாலா

•நான் ஒரு சிறு வீணை

•திருவடி தொழுகின்றேன்

•அப்பா உன்னை மறவேனே

தூரன் இசை நூல்களை பதிப்பித்திருக்கிறார். அவர் பதிப்பித்து தமிழிசை சங்கம் வெளியிட்ட நொண்டிநாடகமும் அருள்மலை நொண்டியும் குறிப்பிடத்தக்க நூல்.



கலைக்களஞ்சியம்

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியின் அமைச்சரவையில், கல்வி அமைச்சராக இருந்த தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார் தமிழ் மொழி வளர்ச்சிக்காக தன்னாட்சி உரிமையுடைய 'தமிழ் வளர்ச்சிக் கழகம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அந்த அமைப்பின் சார்பில் தமிழில் 'கலைக்களஞ்சியம்’ பல தொகுதிகளாக வெளியிடத் திட்டம் வகுக்கப்பட்டது. கலைக்களஞ்சியம் தயாரிக்கும் பணிக்கு தூரன் முதன்மை ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பத்தொன்பது ஆண்டுகள் உழைத்து கலைக்களஞ்சியத்தை உருவாக்கினார். 1948-ல் தொடங்கிய இப்பணி 1968-ல் நிறைவுற்றது.


தொடர்ந்து குழந்தைகள் கலைக் களஞ்சியத்தை 1976-ஆம் ஆண்டு வெளியிட்டார். இது தூரனின் சாதனைப் பணி எனலாம். ஒரு மொழியின் முதல் பேரகராதியும், முதல் கலைக்களஞ்சியமும் என்றவகையில் தூரனின் கலைக்களஞ்சியம் நவீனத் தமிழ் அறிவியக்கத்தின் தொடக்கப்புள்ளி.



இறுதிக்காலம், மறைவு

தூரன் 1980-ல் வாதநோயால் பாதிக்கப்பட்டார். தமிழகத்தில் நிகழ்ந்த அரசியல் மாற்றத்தின் விளைவாக காங்கிரஸ்காரரான தூரன் கடைசிக்காலத்தில் அரசு மற்றும் பல்கலைக் கழகங்களின் புறக்கணிப்புக்கு உள்ளானார். பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் உதவி மட்டுமே அவருக்கு இருந்தது.

ஜனவரி 20, 1987-ல் மரணமடைந்தார்.

நினைவுகள், வாழ்க்கை வரலாறுகள், ஆய்வுகள்

நவீனத் தமிழ் அறிவியக்கத்தின் தலைமை ஆளுமைகள் என்று சொல்லத்தக்க மிகச்சிலரில் ஒருவர் பெரியசாமித் தூரன். அரசியல் காரணங்களால் தூரனைப் போன்ற ஒரு மேதை உரிய முறையில் கௌரவிக்கப்படவில்லை. அவருக்கு தகுதியான நினைவுச் சின்னங்களும் அமைக்கப்படவில்லை. அவர் பிறந்த ஈரோட்டிலோ, அவர் வாழ்ந்த கோவையிலோ, தலைநகர் சென்னையிலோ அவருக்கு நினைவுச் சின்னம் என ஏதுமில்லை.


■ தூரனைப் பற்றிய தொகை நூல் ஒன்றை பாரதீய வித்யா பவன், கோவை மையம் வெளியிட்டிருக்கிறது. சிற்பி பாலசுப்ரமணியம் தொகுப்பாசிரியராகவும், பேராசிரியர் இராம இருசுப்பிள்ளை, டாக்டர் ஐ.கெ.சுப்ரமணியம் ஆகியோர் இணையாசிரியர்களாகவும் செயல்பட, பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் முன்னுரையுடன் வந்திருக்கிறது இந்த நூல்.

■ சிற்பி பாலசுப்ரமணியம் ம.ப. பெரியசாமித் தூரன் என்னும் நூலை இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசைக்காக எழுதினார்

■ தூரன் என்ற களஞ்சியம் ரா.கி.ரங்கராஜன் (கல்கி முன்னுரையுடன்)

■ பெரியசாமித் தூரன் நினைவாக தமிழ் விக்கி இணையக் கலைக்களஞ்சியம் 2022 முதல் 'தமிழ் விக்கி- தூரன் விருது’ வழங்குகிறது. இலக்கியம் -பண்பாடு துறைகளில் பங்களிப்பாற்றியவர்களுக்கான விருது இது.


விருதுகள்

■ 1968 இந்திய குடியரசுத் தலைவர் வழங்கிய பத்ம பூஷன் விருது.

■ 1970 தமிழ்நாடு இயலிசை நாடக மன்றம் வழங்கிய கலைமாமணி விருது.

■ 1972 தமிழ் சங்கம் வழங்கிய, இசைப் பேரறிஞர் விருது.

■ 1978 எம்.ஏ.சி. தொண்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட அண்ணாமலை செட்டியார் விருது.


இலக்கிய இடம்

பெரியசாமித் தூரன் ஐந்து தளப் பங்களிப்புகளுக்காக நினைவுகூரப்படுகிறார்.

பெரியசாமித் தூரனின் முதன்மைப் பங்களிப்பு தமிழின் முதல் முழுமையான நவீனக்கலைக்களஞ்சியத்துக்கு ஆசிரியராக இருந்து அவர் உருவாக்கியளித்தமைதான்.

பாரதி ஆய்வாளர்களில் முன்னோடியாக அவர் மதிப்பிடப்படுகிறார்.

தமிழிசைப் பாடல்களில் அவருடைய கொடை என்றும் வாழ்கிறது.

குழந்தைக் கவிஞராக பெரியசாமித் தூரன் இன்றும் பயிலப்படுகிறார்.

மரபுக்கவிஞராக பெரியசாமித்தூரன் நாமக்கல் கவிஞர் மரபு என்னும் பாரதிக்கு பிந்தைய கவிமரபைச் சேர்ந்தவர். தேசிய இயக்கப் பார்வை, இசைத்தன்மை கொண்ட எளிமையான மொழி, எளிய கட்டமைப்பு கொண்ட கவிதைகளை எழுதிய கவிஞர் அவர்.

நூல்கள்

2008-ல் தமிழக அரசால் பெரியசாமித் தூரனின் நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இணையநூலகத்தில்[3] அந்நூல்களை இலவசமாக வாசிக்கலாம்.


இசைப்பாடல்கள்

தமிழிசைப் பாடல்கள் (15-ஆம் தொகுப்பு)

தமிழிசைப் பாடல்கள் (7-ஆம் தொகுதி)

இசைமணி மஞ்சரி

இசைமணிமாலை 

முருகன் அருள்மணி மாலை 

கீர்த்தனை அமுதம் 

நவமணி இசைமாலை

மரபுக் கவிதைகள்

மின்னல் பூ

இளந்தமிழா

பட்டிப் பறவைகள்

தூரன் கவிதைகள்

நிலாப் பிஞ்சு

காற்றில் வந்த கவிதை

வசனகவிதைகள்

இருளும் ஒளியும்

அறிவாய் நீ

மேலே பற

மானிடா எழுக

யாரது?

வாழ்க்கைப் பயணம்

சந்திப்பு

நமது வழி

சிறார் இலக்கியம்

நல்ல நல்ல பாட்டு

சங்ககிரிக் கோட்டையின் மர்மம்

மழலை அமுதம்

நிலாப்பாட்டி  

பறக்கும் மனிதன்

ஆனையும் பூனையும்

கடக்கிட்டி முடக்கிட்டி

மஞ்சள் முட்டை

சூரப்புலி

கொல்லிமலைக் குள்ளன்

ஓலைக்கிளி

தரங்கம்பாடித் தங்கப் புதையல்

நாட்டிய ராணி

மாயக்கள்ளன்

தம்பியின் திறமை

கட்டுரைகள்

கடல் கடந்த நட்பு

தூரன் எழுத்தோவியங்கள்

காலச் சக்கரம் (இதழியல்)

சிறுகதை

பிள்ளைவரம்

மா விளக்கு

உரிமைப் பெண்

காளிங்கராயன் கொடை

தங்கச் சங்கிலி

அறிவியல் நூல்கள்

பாரம்பரியம் (1956)

அறமனம் (1957)

குமரப்பருவம் (1962)

மனமும் அதன் விளக்கமும் (1960)

குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் (1953)

பெற்றோர் கொடுத்த பெருங்கொடை (1958).

பாரதி ஆய்வுகள்

பாரதியும் பாரத தேசமும்

பாரதியார் நூல்கள் ஒரு திறனாய்வு 

பாரதியும் பாப்பாவும்

பாரதித் தமிழ்

பாரதியும் கடவுளும் 

பாரதியும் சமூகமும் 

பாரதியாரின் நகைச்சுவையும் நையாண்டியும் 

பாரதியும் தமிழகமும் 

பாரதியும் உலகமும் 

பாரதியும் பாட்டும்

பாரதி வசனத்திரட்டு




மொழிபெயர்ப்பு

இரவீந்திரர் குழந்தை இலக்கியம் (1903)

பறவைகளைப் பார் (1970)

கானகத்தின் குரல் (The Call of the wild) (1958)

தாகூரின் ஐம்பெருங் கட்டுரைகள்

நாடகம்

அழகு மயக்கம் (1955)

சூழ்ச்சி (1955)

பொன்னாச்சியின் தியாகம் (1955)

ஆதி அத்தி (1958)

காதலும் கடமையும் (1957)

மனக்குகை (1960)

இளந்துறவி (1961)

பதிப்பித்த நூல்கள்

காளமேகப் புலவரின் சித்திரமடல்

வடிவேல் பிள்ளையின் மோகினி விலாச நாட்டிய நாடகம்

அவிநாசிப் புலவரின் திங்களூர் நொண்டி நாடகம்

சாமிநாதக் கவிஞரின் கொன்றைவேந்தன் வெண்பா


கலைக்களஞ்சியம் உள்ள வரையில் தமிழுலகம் அவரை மறக்காது




Credit: TamilWiki

Post a Comment

Previous Post Next Post

Contact Form