உலகின் முதல் AI அமைச்சர்! வல்லரசு நாடுகளை வாய் பிளக்க வைத்த அல்பேனியா

 

நாட்டில் ஊழலை ஒழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக செயற்கை நுண்ணறிவு அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளதாக அல்பேனியா அரசு தெரிவித்துள்ளது.

இன்றைய நவீன உலகில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மென்பொருள், பொறியியல் உள்ளிட்ட பல துறைகளில் ஆதிக்கம் செலுத்த துவங்கி உள்ளது. எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இல்லாமல் எதுவும் இல்லை என்ற நிலையை நோக்கி உலகம் வேகமாக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், ஏஐ தொழில்நுட்பம் தற்போது விஞ்ஞானத்தை கடந்து அரசியலிலும் கால் பதித்துள்ளது என்றால் நம்புவதற்கு சற்று கடினம்தான். ஆனால், அதை சாத்தியப்படுத்தி ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது அல்பேனியா.

சமீபத்தில் அந்நாட்டில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வென்று நான்காவது முறையாக ஆட்சியை பிடித்துள்ளார் சோசஸிஸ்ட் கட்சியை சேர்ந்த எடி ராமா. புதிய ஆட்சியில் நாட்டில் ஊழலை ஒழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக ஏஐ அமைச்சரை அவர் நியமித்துள்ளார். இந்த ஏஐ அமைச்சருக்கு 'டியெல்லா' என பெயரிடப்பட்டுள்ளது. 'டியெல்லா' என்பது அல்பேனிய மொழியில் சூரியனை குறிக்கும். ஏஐ அமைச்சர் நாட்டின் பொது டெண்டர் நடைமுறைகளை மேற்பார்வையிட்டு ஊழலை தடுக்கும் பணியில் ஈடுபடும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

மேலும், பாரம்பரிய உடை அணிந்து டிஜிட்டல் அவதாரமாக 'டியெல்லா' உருவாக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் ஏற்கெனவே 'இ-அல்பேனியா' தளத்தில் பொதுமக்களுக்கு ஆவணங்கள் தொடர்பான உதவிகளை செய்யும் ஆன்லைன் உதவியாளராக 'டியெல்லா' செயல்பட்டு வந்தது குறிப்பிடத்கதக்கது. உலகம் முழுவதிலும் உள்ள திறமையானவர்களை கண்டறிந்து பணியமர்த்த இந்த ஏஐ உதவியாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

இதனிடையே இந்த ஏஐ அமைச்சர் நியமனத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் ஒருசேர எழுந்துள்ளது. அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை என இந்த ஏஐ நியமனத்தை ஒருசாரார் பாராட்டினாலும், ஒரு தரப்பினர் ஏஐ அமைச்சரை ஏமாற்ற முடியும் எனவும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

டியெல்லா இதுவரை 36,600 டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் சுமார் 1,000 சேவைகளை வழங்கியுள்ளது.

ஜனவரி மாதத்தில் டிஜிட்டல் உதவியாளராக அறிமுகப்படுத்தப்பட்ட டியெல்லா, பாரம்பரிய அல்பேனிய உடை அணிந்த பெண்ணை போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அல்பேனியாவில் ஊழல் பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வரும் நிலையில், இந்த AI அமைச்சர் மூலம் ஊழலை ஒழிக்க முடியும் என அரசு நம்புகிறது.    

ஐரோப்பிய ஒன்றியத்தில் அல்பேனியா இணைய முயன்றுவரும் நிலையில், அந்நாட்டில் நிலவி வரும் ஊழல் அதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது. இந்நிலையில், அல்பேனிய பிரதமரின் இந்த நடவடிக்கை அரசு நிர்வாகத்தில் நிலவும் ஊழலை குறைக்குமா? என்பது அடுத்தடுத்து வரும் நாட்களில் தெரியவரும்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form