மென்ஸ்ட்ருவல் கப் குறித்த விரிவான பதிவு

உலகில் உள்ள மக்கள் தொகையில் 190 கோடி பெண்கள் தங்களது 13 வயது முதல் 51 வயது வரை மாதம் ஒருமுறை 3 முதல் 7 நாட்கள் என்ற விகிதத்தில் தங்களது வாழ்நாளில் 6.25 வருடங்கள் அல்லது 2280 நாட்கள் மாதவிடாய் நாட்களாக கழிக்கின்றனர் இவ்வாறு மாதவிடாய் காலத்தில் சுகாதாரத்தைப் பேணுதல் பொருட்டு ஒரு பெண் தன் வாழ்நாளில் 10,000 சேனிட்டரி நேப்கின்களை உபயோகிக்க வேண்டியிருக்கிறது.


இந்நிலையில், சேனிட்டரி நேப்கின்களுக்கு மாற்றாக எளிதாக உபயோகிக்கும் வண்ணம் அதே சமயம் மீண்டும் மீண்டும் உபயோகிக்கும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டதே

"மாதவிடாய் கிண்ணம்" (MENSTRUAL CUP)

இந்த மென்ஸ்ட்ருவல் கப் - உயர் தர மருத்துவப் பொருட்களுக்காக உபயோகிக்கப்படும் சிலிகான் மூலம் செய்யப்படுகிறது. சேனிட்டரி நேப்கின்களைப் பொருத்தவரை மாதவிடாய் காலங்களில் கீழ் உள்ளாடையில் ஒட்டிக் கொள்ள, யோனிப் பகுதியை வெளிப்புறமாக இருந்து மாதவிடாய் கழிவு ரத்தத்தை உறிஞ்சிக் கொள்ளுமாறு வைக்கப்படுகிறது. மென்ஸ்ட்ருவல் கப்பைப் பொருத்தவரை நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை கொண்ட சிலிகான் என்பதால் இந்த கிண்ணத்தை பெண்கள் தங்களது யோனிக்குள் அகண்ட வாய்ப் பகுதி முன் செல்லுமாறு வைத்துக் கொள்ள வேண்டும்.


மாதவிடாய் கழிவான ரத்தம் இந்த கிண்ணத்தில் சிறிது சிறிதாக நிரம்பும். கிண்ணத்தின் அளவு

சிறியது (16 மில்லி)

நடுத்தர அளவு (21 மில்லி)

பெரியது (26 மில்லி) என்பதைப் பொருத்து ஒருமுறைக்கு அவ்வளவு ரத்தத்தை தேக்கி வைக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது.


சிறிய அளவுள்ள கப்களை 18 வயதுக்குட்பட்ட இதுவரை திருமணமாகாத வளர் இளம் பெண்களும் மாதவிடாய் காலத்தில் குறைவான உதிரப்போக்கு இருக்கும் மகளிர் பயன்படுத்த முடியும்.


நடுத்தர அளவுள்ள கப்களை இதுவரை பிறப்புறுப்பு வழியாக குழந்தை ஈன்றிராத 18 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் பயன்படுத்த முடியும்.


பெரிய அளவுள்ள கப்களை மாதவிடாய் அதிக அளவு உதிரப்போக்கு இருப்பவர்களும் பிறப்புறுப்பு வழியாக குழந்தை ஈன்றவர்களும் பயன்படுத்த முடியும்.


இந்த கப்கள் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மையுடன் இருப்பதால் அவற்றை இரண்டாக மடித்து பிறப்புறுப்பின் உள் வைத்துக் கொள்ள வேண்டும்.


ஆரம்பத்தில் இந்த கப்களை பயன்படுத்தும் போது அவற்றை உள்ளே வைத்து வெளியே எடுப்பது கடினமாகத் தோன்றினும் சில மாதங்களிலேயே எளிதாக உள்ளே வைத்து எடுக்கும் நிலை கைகூடும் என்று உபயோகிப்பாளர்கள் ஆய்வுகளில் சான்று பகிர்ந்துள்ளனர்.


1930 களில் அமெரிக்காவில் கண்டறியப்பட்டது முதல் 2021 இல் இந்தியாவிலேயே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கப் வரை மென்ஸ்ட்ருவல் கப் குறித்து ஊடக விளம்பரங்களோ அல்லது மருத்துவர் கூட்டங்களில் இதைக்குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோ ஏதும் பெரிதாக இல்லாததால் இது குறித்த விழிப்புணர்வு குறைபாடு நிலவுவது உண்மை.


இந்தியாவைப் பொருத்தவரை ஐந்தாம் தேசிய குடும்ப நல கணிப்புப்படி (NFHS-5) 77.3% மகளிர் மாதவிடாய் காலங்களில் சேனிட்டரி நேப்கின்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் சேனிட்டரி நேப்கின்களைப் பயன்படுத்தினாலும் அவற்றை முழுமையான திருப்தியுடன் பயன்படுத்துவதில்லை என்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.


சேனிட்டரி நாப்கின் பயன்பாட்டாளர்களிடையே உள்ள பொதுவான சிரமங்கள்

- நாப்கின்களால் ஏற்படும் சரும அலர்ஜி

- அரிப்பு ( வெயில் காலங்களில் சற்று கூடுதல்)

- கீழ் உள்ளாடைகளில் அதிகமான பளுவை சுமக்கும் உணர்வு

- பிசுபிசுப்பான சங்கடமான உணர்வு

- கீழ் உள்ளாடைகளில் நாப்கின்களை கச்சிதமாகப் பொருத்த வேண்டிய தேவை. அவ்வாறு பொருத்தாவிடில் ரத்தம் லீக் ஆகி உடைகளில் படிதல்

- சரியான நேரத்தில் நாப்கின்களை மாற்ற வேண்டிய தேவை

- பிரதி மாதம் நாப்கின்களுக்கு ஆகும் செலவினம்


பல விளம்பரங்களில் சேனிட்டரி நாப்கின்களை அணிந்து கொண்டு மகளிர் விளையாடுவது போடுவதும் ஓடுவது ஆடுவது என்று இருப்பது போலவும் காட்டப்படுகின்றது. ஆனால் நிஜத்தில் சானிட்டரி நாப்கின்கள் அத்தனை சவுகரியமாக இருப்பதில்லை என்பதே உபயோகிப்பாளர்கள் கூறும் உண்மையாக இருக்கிறது.


பொது சுகாதாரம் மற்றும் சுற்றுப்புறச்சூழலைப் பொருத்தவரை ஆயுள் முழுக்க 10,000 மறுமுறை பயன்படுத்த இயலாத எளிதில் மக்காத நாப்கின்களை வெளியே போடும் போது ஏற்படும் சுற்றுப்புறச்சூழல் அச்சுறுத்தல் ஒருபுறம் என்றால் நேப்கின்கள் மூலம் அதை உபயோகிக்கும் பெண்களும் முழு திருப்தியில் இல்லை என்பது தெரிகிறது.


சரி இதற்கு மாற்றாக ஐந்து முதல் ஆறு வருடங்கள் உபயோகிக்கத்தக்க மீண்டும் மீண்டும் உபயோகிக்கத் தக்க அலர்ஜி ஏற்படுத்தாத சிலிகான் மூலம் செய்யப்படும் மென்ஸ்ட்ருவல் கப்களைப் பற்றி பெண்கள் அறிந்துள்ளனரா?


மங்களூரில் இது குறித்து செய்யப்பட்ட ஆய்வில் 300 மகளிர் பங்குபெற்றனர் அதில் 82% பெண்களுக்கு இத்தகைய கப்கள் இருப்பது தெரியும் என்றும் ஆனால் அவர்களிடையே 2.6% மட்டுமே அவற்றைப் பயன்படுத்துகின்றனர் என்பதும் தெரியவந்தது.

சரி மென்ஸ்ட்ருவல் கப் உபயோகிப்பவர்கள் அதுகுறித்து கூறும் விஷயங்களைப் பார்த்து விடுவோம்.


முதலில் நன்மையான விஷயங்கள்

- இவற்றை பயன்படுத்துவது எளிமையானதாகவும் சவுகரியமாகவும் இருப்பதாக பெரும்பான்மை மகளிர் தெரிவித்துள்ளனர்

- கூடவே ஆரம்ப நாட்களில் பயன்படுத்தும் போது சரியாக உள்ளே வைத்து வெளியே எடுப்பதில் சிக்கல் இருக்கும் ஆனால் மாதங்கள் செல்லச் செல்ல பிரச்சனையிருப்பதில்லை. லீக் ஆகும் வாய்ப்பு வெகுவாகக் குறைகிறது.

- கப்களை பயன்படுத்துவது திருப்தியாக இருக்கிறது என்று மகளிர் ஓட்டு போட்டிருக்கின்றனர்.

சரி.. நெகடிவ் விஷயங்கள் என்னென்ன?

- இது குறித்த விழிப்புணர்வு சமுதாயத்தில் மிக மிகக் குறைவு

- மருத்துவர்களுக்கே இது குறித்த விழிப்புணர்வு குறைவு என்பதும் உண்மை

இதனால் இதை பரிந்துரை செய்பவரும் இல்லை . உபயோகிப்பாளரை ஊக்குவிப்போரும் குறைவு.

- பிறப்புறுப்புக்கு உள்ளே வைக்கும் உபகரணமாக இருப்பதால் இது ஒருவித அறுவெறுப்புடன் நோக்கப்படுகிறது.

- இந்த கப் தேர்ந்தெடுத்தலைப் பொருத்தவரை அவரவருக்கு உகந்த சைஸ் சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும்.

- சரியாக பொருந்தாமல் உள்ளே வைத்தால்

குத்துவது போன்ற வலி எடுக்கும் வாய்ப்பு உள்ளது.

- ஆரம்ப நாட்களில் , உள்ளே வைத்து விட்டு வெளியே எடுப்பதற்கு சிரமம் ஏற்பட்டு அதனால் பயம் பதட்டம் ஏற்படலாம். எனினும் சில நாட்களில் அதை எளிதில் செய்ய முடியும் .

இந்த கப்களை உபயோகிப்பாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன?

- இந்த கப்களை நீரில் கொதிக்க வைத்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.

எனவே நீர் மற்றும் அதை கொதிக்க வைக்கத் தேவையான வெப்பம் வேண்டும்.

- நாப்கின்களைப் போல எளிதில் பார்மசிகளில் கிடைக்குமாறு இந்த கப்கள் இல்லை. ஆன்லைன் மூலம் மட்டுமே பெரும்பாலும் வாங்க முடிகிறது.

மென்ஸ்ட்ருவல் கப் சந்தையில்

200 ரூபாயில் இருந்து 2000 ரூபாய் வரை விற்கிறது.

நல்ல தரமான கப் ரூபாய் 1000 என்ற விலையில் கிடைக்கிறது.

ஐந்து வருடங்கள் வரை உபயோகிக்கும் போது மாதாந்திர செலவினம் குறைகிறது என்றாலும்

பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களால் ஆரம்பத்தில் ஆயிரம் ரூபாய் கொடுத்து கப் வாங்க இயலாது என்பதே உண்மை.

அரசாங்கங்கள் இந்த கப்களை ஒருமுறை இலவசமாக பொருளாதாரத்தில் நலிவுற்ற மகளிருக்கு வழங்கினால் ஐந்து வருடங்கள் வரை எந்த செலவினமும் இன்றி மாதவிடாய் நலனைப் பேண முடியும். இந்த விஷயத்தில் அடுத்த சவால் என்னவென்றால் பொது இடங்களுக்கு வெளி இடங்களுக்கு செல்லும் போது மகளிர் பொதுக் கழிப்பிடங்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்.


மாணவிகள் என்றால் பள்ளி கழிப்பறைகள் பெண்கள் என்றால் அலுவலக கழிப்பறைகள் நேப்கின்களை இவ்விடங்களில் மாற்றுவது என்பது எளிதானது ஆனால் கப்களைப் பொருத்தவரை அவற்றில் இருக்கும் கழிவு ரத்தத்தை கழிப்பறையில் ஊற்ற வேண்டும். அது கூட பிரச்சனையில்லை. ஆனால் கப்களை கழுவுவதற்கு சுத்தமான நீர் சிறுதளவாவது வேண்டும். இது நமது நாட்டில் பெரிய சவால் தான்.

பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பவர்கள் கைகளில் சுத்தமான நீர் கொண்டு செல்ல முடியும் ஆனால் நலிவுற்ற நிலையில் இருக்கும் மக்களுக்கு இது சவாலாக இருக்கும். இவையெல்லாம் சவால்களாயினும் உலகெங்கும் மென்ஸ்ட்ருவல் கப்கள் கொண்டு செய்யப்பட்ட ஆய்வுகளில், மென்ஸ்ட்ருவல் கப் - உபயோகிப்பாளர்களிடையே திருப்திகரமானதாக இருப்பதாகவும். உபயோகிக்க எளிமையானதாகவும் இருப்பதாகவே முடிவுகள் கிடைக்கின்றன. கப் உபயோகிக்கும் போது முதல் பீரியட்ஸின் போது அதை வைத்து எடுப்பதில் சிக்கல்கள் இருக்கிறது என்று கூறியவர்கள் கூட மூன்றாவது பீரியட்ஸுக்குப் பிறகு அத்தகைய பிரச்சனை வெகுவாகக் குறைந்ததைக் கூறியிருக்கின்றனர்.


ஒரு ஆய்வில் கப் உபயோகிப்பாளர்களில் 70% க்கும் மேல் அதை தொடர்ந்து பல வருடங்களாக உபயோகித்து வருவதாகக் கூறியிருக்கின்றனர்.

கப் உபயோகிப்பதால் பிறப்புறுப்பில் ஏற்படும் தொற்று நிகழ்வுகள் என்பது அதை சரியாக பராமரிக்காததால் ஏற்படும் நிகழ்வுகளாகவே இருக்கின்றன.

மற்றபடி

சானிட்டரி நாப்கின்கள் / துணி / டாம்பான்கள் ஆகியவற்றை ஒப்பிடும் போது மென்ஸ்ட்ருவல் கப்கள் சுகாதாரமானவையாகவும் பக்கவிளைவுகள் குறைவானதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


முடிவுரை

மகளிரைப் பொருத்தவரை அவர்களின் மாதவிடாய் காலங்களில் முறையான சுகாதாரத்தைப் பேணுதல் என்பது அவசியமாகும். அதைப் பேணும் பொருட்டு சானிட்டரி நாப்கின்கள் உபயோகிக்கப்படுகின்றன.

எனினும் சானிட்டரி நாப்கின்கள் மக்காத குப்பையாக இருப்பதால்- சுற்றுச் சூழல் / பொது சுகாதாரம் ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் தருவதாலும்

கூடவே உபயோகிப்பாளருக்கும்

ரத்தம் வெளியே கசிதல்

அரிப்பு / நமிச்சல் / எரிச்சல்

அசவுகரியமாக இருத்தல்

கெட்ட வாசனை அடித்தல்

ஆகிய பல பிரச்சனைகளைக் கொண்டுள்ளது.

மேலும் பிரதிமாதம் சில நூறு ரூபாய்கள் நேப்கின்களுக்கென செலவு ஆகிறது.

எனவே, மேற்கூறிய பிரச்சனைகள் இருந்து அதில் இருந்து மாற்று தேடும் சகோதரிகள் மென்ஸ்ட்ருவல் கப்கள் பயன்படுத்தலாம்.

அறிவியல் பூர்வமான ஆய்வுகளின் படியும் மென்ஸ்ட்ருவல் கப் பயன்பாடு என்பது பிரச்சனையற்றதாகவும் உபயோகிப்பாளர்களிடையேவும் திருப்தி தரக்கூடியதாகவும் இருப்பதால் அதை விரும்பினால் மாற்றாக உபயோகிக்கலாம் என்றுரைத்து எனது கட்டுரையை நிறைவு செய்கிறேன்.


நன்றி (CREDIT : Doctor Farook Abdulla's Writeup)

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா

பொது நல மருத்துவர்

சிவகங்கை


ஆதாரங்களுக்காகப் படித்தவை

References

1.Mangalore survey

S. Ballal, A. Bhandary

Menstrual cup: awareness among reproductive women

Int J Reprod Contraception, Obstetrics Gynecol


2.Here is the link to "Is menstrual cup a sustainable and safe alternative in menstrual hygiene management? A qualitative exploratory study based on user's experience in India": https://www.sciencedirect.com/science/article/pii/S221339842200255


3. https://www.cureus.com/articles/92149-study-of-adaptability-and-efficacy-of-menstrual-cups-in-managing-menstrual-health-and-hygiene-a-descriptive-longitudinal-study#!/


4. Menstrual cup use, leakage, acceptability, safety, and availability: a systematic review and meta-analysis - The Lancet Public Health https://www.thelancet.com/journals/lanpub/article/PIIS2468-2667%2819%2930111-2/fulltext

Post a Comment

Previous Post Next Post

Contact Form