திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும்: 1908


-----------------

2024ஆம் ஆண்டு தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது வரலாற்றாய்வாளர். ஆ.இரா. வேங்கடாசலபதி எழுதிய 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908' நூலுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த நூல் பற்றிய ஒரு அறிமுகம் இது. 


தமிழ்நாட்டின் அரசியல் மனநிலையை வடிவமைத்ததில் பல்வேறு கலகங்களும் எழுச்சிகளும் போராட்டங்களும் முக்கியப் பங்கை வகிக்கின்றன.

சுதந்திரத்திற்குப் பின்பு நிகழ்ந்த போராட்டங்கள் குறித்து பலருக்கும் சிறிதளவு அறிமுகமாவது இருந்தாலும், சுதந்திரத்திற்கு முன்பு நடந்த எழுச்சிகள்...

அதில் நிகழ்ந்த தியாகங்கள், அதன் தாக்கங்கள் குறித்த கவனம் மிகக் குறைவு. அப்படி ஒரு எழுச்சிதான் 1908ல் நடந்த திருநெல்வேலி எழுச்சி.
1908ஆம் ஆண்டு வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். இதையடுத்து மார்ச் 13ஆம் தேதி...



வெள்ளிக்கிழமை திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் மக்களின் எழுச்சி ஏற்பட்டது. இந்த எழுச்சியின்போது பல இடங்களில் அரச சொத்துகள் சூறையாடப்பட்டன. தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. 
இந்த எழுச்சிக்கான பின்னணியாக அமைந்த சம்பவங்கள் இவைதான்:

1906ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் கம்பனி லிமிட்டெட் பதிவுசெய்யப்பட்டது.சில காலத்திலேயே இந்தக் கம்பனிக்கும் பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம் நேவிகேஷன் கம்பனிக்கும் இடையில் பலத்த போட்டி ஏற்பட்டது. பல தருணங்களில் கைகலப்புகளும் நடந்தன. 






பிரிட்டிஷ் நிறுவனத்திற்கு ஆதரவாக அரசாங்கம் நடந்துகொண்டது.

1908 ஜனவரியில் திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும்சுப்பிரமணிய சிவா, வ.உ.சி., பத்மநாப அய்யங்கார், சோமசுந்தர பாரதி ஆகியோர் வீறுமிக்க உரைகளை ஆற்றினர். இதன் விளைவாக எழுச்சி பெற்ற தூத்துக்குடி கோரல் ஆலை தொழிலாளர்கள்...

வேலை நிறுத்தத்தில் இறங்கினர். ஆலை மூடப்பட்டது. இதற்குப் பிறகு வ.உ.சி. தலையிட்டு பேச்சு வார்த்தை நடத்தியதில், தொழிலாளர் கோரிக்கை ஏற்கப்பட்டு, மார்ச் 7ஆம் தேதி அவர்கள் வேலைக்குத் திரும்பினர்.
இதற்கிடையில் விபின் சந்திர பால் சிறையிலிருந்து வெளியேறும் மார்ச் 9ஆம் தேதியை சுயராஜ்ய நாளாக கொண்டாட சுதேசி இயக்கத்தினர் முடிவுசெய்தனர். 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கூட்டம் நடத்தக்கூடாது எனக் கூறப்பட்டது. இருந்தபோதும் கூட்டம் நடத்தப்பட்டது. அடுத்த நாள் தூத்துக்குடியிலும் கூட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து வழக்குப் பதிவுசெய்யப்பட்டு மார்ச் 12ஆம் தேதி வ.உ.சி., சு.சிவா, பத்மநாப அய்யங்கார் ஆகிய மூவரும் கைதுசெய்யப்பட்டனர். இதற்குப் பிறகு, மார்ச் 13ஆம் தேதி மக்கள் கூட ஆரம்பித்து, கலகத்தில் இறங்கினர். கடைகள் மூடப்பட்டன. நீதிமன்றம், மருத்துவமனைகள் தாக்கப்பட்டன. நகரெங்கும் விளக்குகள் உடைக்கப்பட்டன.



போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. பலர் கொல்லப்பட்டனர். திருநெல்வேலியில் சார்பதிவாளர் அலுவலகம் தவிர்த்து அனைத்தும் தாக்குதலுக்கு உள்ளாயின.
பிறகு ஒருவழியாக இந்த எழுச்சி முடிவுக்கு வந்தது.
இந்த எழுச்சியின் தாக்கம் என்னவாக இருந்தது, இதற்குப் பிறகு கைதுசெய்யப்பட்டவர்கள் என்னவானார்கள், என்ன தண்டனைகள் விதிக்கப்பட்டன, நீண்ட காலத் தாக்கம் என்ன என்பதை பல்வேறு சான்றாவணங்களின் உதவியுடன் விவரிக்கிறது ஆ.இரா.வேங்கடாசலபதியின் "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908" புத்தகம்.
இந்தப் புத்தகம் ஒரு ஆய்வு நூல். 

ஆனால், ஒரு துப்பறியும் நாவலுக்கான சுவாரஸ்யத்துடன் எழுதப்பட்ட ஆய்வு நூல். இன்றைய காலகட்டத்திலிருந்து நாம் பல வரலாற்றுப் பாத்திரங்களை தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதை இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது உணர முடியும். ஒவ்வொருவரது சிந்தனைக்குப் பின்னாலும் எத்தகைய தியாக உணர்வும், நாட்டுப்பற்றும் இருந்ததென்பதை யூகிக்க முடியும். 

'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சியும் 1908' - கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.

நூலின் விலை: ரூ. 290/-
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்.

நன்றி.....

Post a Comment

Previous Post Next Post

Contact Form