ஒரு தமிழ் கடிகாரத்தின் கதை

 ஒரு தமிழ் கடிகாரத்தின் கதை


இந்தியாவில் ஒரு காலத்தில் மத்திய அரசு நிறுவனமான ஹிந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் மட்டுமே கடிகாரங்களைத் தயாரிக்க உரிமம் பெற்றிருந்தது. சிறிய நிறுவனங்கள் உள்ளூர் அளவில் தயாரித்துக்கொள்ளலாம்.


வேறு பெரிய நிறுவனங்கள் எதற்கும் கடிகாரம் தயாரிக்க அனுமதி கிடையாது. 'லைசன்ஸ் ராஜ்' உச்சத்தில் இருந்த நேரம்.

இந்த நேரத்தில் டாடா நிறுவனம் கைக் கடிகாரத் தயாரிப்பில் ஈடுபட விரும்பியது. ஆனால், அதற்கான தொழில்நுட்பத்தைத் தரும் வகையில் உலகில் ஐந்து பெரிய நிறுவனங்களே இருந்தன.

1. சிட்டிசென், 2. சீகோ, 3. டைமெக்ஸ், 4.கேசியோ, 5. ASUAG என்ற SWATCH. 

இதில் சிட்டிசென் எச்எம்டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தது. சீகோ, ஆல்வின் நிறுவனத்துடன் பேசிக்கொண்டிருந்தது. டைமெக்ஸ் பெரும் பொருளாதார நெருக்கடியில் இருந்தது.


அப்போதுதான் கடிகாரம் தயாரிக்க ஆரம்பித்திருந்த கேசியோ, digital கடிகாரங்களைத் தயாரிப்பதில் கவனம் செலுத்தத் துவங்கியிருந்தது. SWATCH தங்கள் தொழில்நுட்பத்தை யாரிடமும் பகிர தயாராக இல்லை. அப்போது டாடாவின் கடிகார தயாரிப்பு முயற்சியை முன்னெடுத்துச் சென்றுகொண்டிருந்தவர் ஜெர்ஜெஸ். 


ஆனால், அவருடைய முயற்சிகளில் வெற்றி ஏதும் கிடைக்கவில்லை. இப்படியிருக்கும்போது 1979 செப்டம்பரில் ஒரு நாள். அப்போதுதான் தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவராக ஐராவதம் மகாதேவன் பொறுப்பேற்றிருந்தார். ஜெர்ஜெஸை அழைத்தார் மகாதேவன்.


"நாங்கள் ஃப்ரான்சின் கடிகார நிறுவனமான France Ebauches உடன் பேசிக்கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் எங்களுக்கு ஒரு கூட்டாளி தேவை. டாடாவுக்கு இதில் ஆர்வம் இருக்கிறதா?" என்றார் ஐராவதம் மகாதேவன். 

இப்படி ஒரு தருணத்திற்காகக் காத்திருந்த டாடா அதை கெட்டியாகப் பிடித்துக்கொண்டது. 


அரசு நிறுவனம் என்றால் எளிதில் லைசென்ஸ் கிடைக்கும். எல்லா ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி முடிக்கும்போது ராஜீவ் காந்தி பிரதமராகியிருந்தார். பொருளாதாரத்தைத் திறந்துவிடும் எண்ணமும் இருந்தது. 

ஆனாலும் டாடாவுக்கும் டிக்கோவுக்கும் லைசென்ஸ் கிடைக்குமா என்ற சந்தேகம் இருந்தது. 


ஆகவே, Quester Investments என்ற பெயரில் விண்ணப்பித்தார்கள். டாடாவின் பெயரே விண்ணப்பத்தில் இல்லை. பிறகு brand பெயரை யோசித்தபோது, Tata Industries என்பதில் T, I என்ற எழுத்துகளையும் Tamilnadu என்பதிலிருந்து T,A,N என்ற எழுத்துகளையும் இணைத்து, TITAN என்ற பெயர் உருவாக்கப்பட்டது.

1986ல் ஓசூரில் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 87 பிப்ரவரியில் உற்பத்தி துவங்கியது. அடுத்த மாதமே கடிகாரங்கள் விற்பனைக்கு வந்தன. ஏப்ரல் 89க்குள் பத்து லட்சம் கைக்கடிகாரங்கள் விற்றுத் தீர்ந்தன. இப்போது டைட்டனின் மொத்த சந்தை மதிப்பு 64 ஆயிரம் கோடி ரூபாய்.


இவ்வளவு பெரிய பிராண்டிற்கு அடித்தளம் போட்ட ஜெர்ஜெஸ் தேசாய் 2016ல் காலமானார். ஐராவதம் மகாதேவன் 2018ல் உயிரிழந்தார். தமிழ் பிராமி எழுத்துகள் குறித்த ஆய்வுகளுக்காக மகாதேவன் பெரிதும் அறியப்பட்டாலும், டைட்டன் உருவாக்கத்தில் முதல் கல் அவருடையது.

தமிழ்நாடு அரசின் TIDCOதான் இன்னமும் டைட்டனின் பிரதான பங்குதாரர். தமிழ்நாடு அரசின் தொழில்துறை செயலரே, இந்த நிறுவனத்தின் சேர்மன். இந்நிறுவனம் மூலம் தமிழ்நாடு அரசு வருடம்தோறும் கோடிக்கணக்கான ரூபாயை ஈவு தொகையாகப் பெறுகிறது. டைட்டன் கடிகாரங்களைத் தாண்டிய பிராண்டாகிவிட்டது.


கண் கண்ணாடிகள், நகைகள், புடவை என பல பொருட்களை விற்பனை செய்யும் இந்தியாவின் மிக வெற்றிகரமான கன்சூமர் பிராண்டாக உருவெடுத்திருக்கிறது. 

டைட்டனின் முழு கதையையும் தெரிந்துகொள்ள படிக்க வேண்டிய புத்தகம் வினய் காமத் எழுதிய TITAN: Inside India's Most Successful Consumer Brand.


Thanks to Mr.Muralitharan.K 

BBC JOURNALIST (SOURCES TAKEN  FROM HIS OFFICIAL TWITTER HANDLE)

Post a Comment

Previous Post Next Post

Contact Form